மேலத்தெரு - கொடிநகர் முக்கிய நிகழ்வுகள்

மேலத்தெரு - கொடிநகர்.

Saturday, December 10, 2011

டிசம்பர் 6 - த.மு.மு.க.வின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - திருவாரூர்.


டிசம்பர் 6 - த.மு.மு.க.வின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் -

திருவாரூர்.


டிசம்பர் 6’ - ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் வரும்போது, நம் ஒவ்வொருவருடைய கண் முன்னே வருவது பாபரி  மஸ்ஜித்-தின் மீது விழுந்த கடப்பாரைகள் தான். காரணம், அவை ஒரு கட்டிடத்தின் மீது விழுந்தவை அல்ல... ஒவ்வொரு இஸ்லாமியரின் உயிரினும் மேலான இறை இல்லத்தின் மீது விழுந்தவை... இந்திய ஜனநாயகத்தின் மீது விழுந்த சவுக்கடி. மத ஒற்றுமைக்கு பெயர் எடுத்த இந்தியாவிற்கு, உலக நாடுகள் முன் தலைகுனிவை ஏற்படுத்திய செயல் அது...

 வருடங்கள் 19 ஆயினும், இக்கொடூர குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. இந்த சம்பவத்தைப் பற்றி விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ‘லிபர்ஹான் ஆணையம்’  17 ஆண்டுகளில் 48 முறை நீட்டிப்பு பெற்று, இந்தச் சம்பவத்தின் மீது தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த்தது. அதில், இந்தியாவின் முன்னாள் பிரதமர், முன்னாள் துணை பிரதமர், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் மத துவேஷ எண்ணம் கொண்ட பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் 68 பேர் மீது குற்றம் சுமத்தியது.
  
அதோடு மட்டுமல்லாமல், அயோத்தியில் ‘பாபரி மஸ்ஜித்’ அமைந்திருந்த இடம் யாருக்குச் சொந்தம்? என்று தொடரப்பட்ட வழக்கில், பன்னெடுங்காலத்திற்குப் பிறகு, அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், இறை இல்லத்தை இடித்த கயவர்களுக்கு, அவ்விடத்தில் 3-ல் 2 பங்குகளும், இழந்தவர்களுக்கு 1 பங்கும் என பாகப்பிரிவினைத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இது நடுநிலைவாதிகள் யாராலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத ஒரு தீர்ப்பாகும். எனவே, இதனை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில், இஸ்லாமிய சமுதாயம் வழக்குத் தொடர்ந்துள்ளது.

 இந்த வழக்குகளில் உச்சநீதிமன்றம், புராதான கதைகளுக்கும், மத நம்பிக்கைகளுக்கும் இடம் தராமல், இந்திய உரிமையியல் சட்டத்தின் அடிப்படையில் விரைந்து தீர்ப்பு வழங்கக்கோரியும், ‘பாபரி மஸ்ஜித்’-தை இடித்த அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 68 நபர்களின் மீது விரைந்து நடவடிக்கைக் கோரியும்,

இந்த நாட்டில் உற்றார் உறவினராய், சகோதர, சகோதரிகளாய் வாழ்ந்து வரும் இந்து, முஸ்லிம் சமுதாய மக்களை பிரித்தாளும் கொள்கையுடன் செயல்பட்டு, சிறுபான்மை இனத்தவர்களுக்கு தாங்களே பாதுகாப்பு என்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி, சங் பரிவார் அமைப்புகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என்று செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியையும் கண்டித்து,

த.மு.மு.க.-வின் சார்பாக திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு, டிசம்பர் 6 2011, செவ்வாய்க்கிழமைக் காலை ‘ சிறப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ’ நடைப்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், முஹர்ரம் 10-ம் நாள் நோன்பு வைத்துக் கொண்டும், தங்களின் கைக்குழந்தைகளுடனும், ஏராளமான ஆண்களும், பெண்களும், சிறுவர், சிறுமியரும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் த.மு.மு.க. - ம.ம.க. வின் கிளைக் கழக நிர்வாகிகள் தலைமையில் கலந்து கொண்டனர்.

காலை 11 மணிக்கு ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, த.மு.மு.க. திருவாரூர் மாவட்டத் தலைவர் எம். முஜிபுர்ரஹ்மான் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.


தலைமையுரையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட வழக்கறிஞர் அணித் தலைவர் சகோ. பிரபுதாஸ், சகோ. மன்னை செல்லசாமி, ம.ம.க-வின் மாவட்ட செயலாளர் சகோ. முஹம்மது மாலிக் ஆகியோரின் கண்டன உரைகளுடன் தொடர்ந்தது.


இடையிடையே, கீழ்க்கண்ட வாசகங்கள் அடங்கிய ஆர்ப்பாட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.


ஆர்ப்பாட்ட கோஷங்களை, சகோ. நாச்சிக்குளம் தாஜுதீன், மாவட்ட உலமாக்கள் அணித் தலைவர் சகோ. பி. எஸ். அஹமது, சகோ. குத்துபுதீன், சகோ. அடியற்கை ஜலீல், சகோ. ஹலீல் ரஹமான், முத்துப்பேட்டை சம்சுதீன், மாவட்டத்தலைவர் எம். முஜிபுர்ரஹ்மான் ஆகியோர் முன்னின்று எழுப்பினர்.


ஆர்ப்பாட்டத்தின் நடுவே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை, மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளரிடம், மாவட்டத்தலைவர் எம். முஜிபுர்ரஹ்மான் அவர்கள் தலைமையில் குத்துபுதீன், சாகுல், ஃப்ஜ்ருல் ஹக், வழக்கறிஞர். பிரபுதாஸ் மற்றும் வழக்கறிஞர். தீன் முஹம்மது ஆகியோர் அடங்கிய குழு சென்று அளித்தது. விடுமுறை தினமாக இருந்தபோதிலும், நீதிமன்றப் பதிவாளர் அவர்கள் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்து, இந்த மனுவைப் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

  முக்கிய நிகழ்வாக, த.மு.மு.க.-வின் தலைமைக் கழகப் பேச்சாளர் சகோ. கோவை. முஜிபுர்ரஹ்மான் அவர்களின் எழுச்சிமிகு கண்டன உரை அமைந்தது.


அவரைத் தொடந்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினரும் ஆசிரியருமான தோழர். எஸ். தியாகராஜன் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, வாழ்த்துரை வழங்கினார்.

  இறுதியாக, மாவட்டத் துணைத் தலைவர் சகோ. ஃப்ஜ்ருல் ஹக் அவர்கள் நன்றிக் கூறி துஆ ஓத, ஆர்ப்பாட்டம் மதியம் ஒரு மணியளவில் முடிவடைந்தது.

ஆர்ப்பாட்டக் களத்தில் சில பதிவுகள்...






செய்தி மற்றும் படங்கள் :ஆரூர். மு. அஜ்மல் கான் ஜபருல்லா.


No comments:

Post a Comment