மேலத்தெரு - கொடிநகர் முக்கிய நிகழ்வுகள்

மேலத்தெரு - கொடிநகர்.

Sunday, October 24, 2010

நம்பிக்கை மனிதர்கள்... 'நேசம்'கிருஷ்ணன்!

வாக்களியுங்கள் நம்மால் முடியாததை இவர் செய்கிறார்
துரை இளைஞர் கிருஷ்ணன்... சி.என்.என். (CNN) தேர்ந்தெடுத்துள்ள உலகின் சிறந்த 10 மனிதர்களுள் ஒருவர்.
சமூக அக்கறை, நம்பிக்கை, விடா முயற்சி இவற்றை மட்டுமே மூலாதாரமாகக் கொண்டு இந்தப் பூமியில் மாற்றத்தைக் கொண்டு வர முனைந்து செயல்படுவோரைக் கண்டறிந்து, ஆண்டுதோறும் சிறந்த மனிதர்களை உலகுக்கு அடையாளம் காட்டி வரும் திட்டமே 'சி.என்.என். ஹீரோஸஸ்'.
இதில், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 10 மனிதர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர், தமிழரான கிருஷ்ணன். (இவர், முதலிடம் பெறுவது உங்கள் கையில் - விவரம் கீழே)
தனி மனிதர் ஒருவருக்கு உணவில்லாதபோது, அவரது வயிற்றுச் சோறிட்டு வருபவர் இவர்.
கிருஷ்ணனை 2005 ஆம் ஆண்டே வாசகர்களுக்கு அடையாளம் காட்டியது விகடன். அவரது சமூகப் பணியின் ஆரம்பகட்ட நிலை குறித்து ஜூலை 31, 2005 தேதியிட்ட ஜூனியர் விகடனில் வெளிவந்த செய்திக் கட்டுரை இதோ ஒரு ஃப்ளாஷ்பேக்காக...
****
நம்பிக்கை மனிதர்கள்... 'நேசம்'கிருஷ்ணன்! 

நான்கு வருடங்களுக்கு முன் கேட்டரிங் டெக்னாலஜி முடித்துவிட்டு, பெங்களூரில் ஸ்டார் ஓட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணன். சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து வேலை வாய்ப்பு அவருடைய கையைப் பிடித்து இழுக்க... அங்கு புறப்படும் முன் ஒரு வாரம் ரிலாக்ஸ்டாக இருப்பதற்காக சொந்த ஊரான மதுரைக்குப் போயிருக்கிறார் கிருஷ்ணன். அந்த பயணம் ஒட்டு மொத்தமாக அவருடைய வாழ்க்கையையே மாற்றிப்போட, இன்றைக்கு மனித நேயம் மிக்க மனிதராக உருவெடுத்திருக்கிறார் கிருஷ்ணன்.
"அப்பாவும், அம்மாவும் வேலைக்கு போனப்புறம் சும்மாதானே இருக்கோம்... ஊரை ஒரு ரவுண்ட் அடிப்போம்னு சைக்கிளை எடுத்துக்கிட்டு மதுரை ரயில்வே ஸ்டேஷன் பக்கமா போனேன். மேம்பாலத்தை ஒட்டி ரோட்டோரமா அழுக்குத் துணிபோல கிடந்தார் ஒரு பெரியவர். நெருங்கிப் பார்த்தேன்... மனநிலை சரியில்லாத நபரான அந்தப் பெரியவர், தன்னோட நரகலை தன் கையில எடுத்து சாப்பிட்டுக்கிட்டிருந்தார். எனக்குள்ளே ஷாக் அடிச்ச மாதிரியிருந்தது. உடனே அவரோட கையப் புடிச்சு உதறி விட்டேன். அவரைச் சுத்தப்படுத்தி உட்கார வெச்சுட்டு, ஓட்டல்ல இருந்து இட்லிய வாங்கிவந்து குடுத்தேன். அவரோட கண்கள்ல நீர்கட்டி நின்னுச்சு.
அதே நினைப்போட வீட்டுக்குத் திரும்பி வந்த நான், இந்த மனித வாழ்க்கையில இப்படியெல்லாம் கஷ்டங்கள் இருக்கறத நினைச்சு நினைச்சு 'ஓ'னு அழுதேன். அதுக்கப்புறம் எனக்கு சுவிட்சர்லாந்து பெருசா தெரியல. 'ஸ்டார் ஓட்டல்ல ஐந்நூறு ரூபாய்க்கு ஃப்ரைடு ரைஸ் வாங்கி, அதுல முக்கால் பிளேட்ட சாப்பிடாம மிச்சம் வெச்சுட்டுப் போறவங்களுக்கு சர்வீஸ் பண்றத விட, தெருவோரத்துல தூக்கி வீசப்பட்டவங்களுக்கு சேவை பண்றதே சரி'னு என் மனசுக்கு பட்டுது. ஊர்லயே தங்கிட்டேன்" என்று படு இயல்பாகச் சொல்லி நம்மை நெகிழவைக்கிறார் கிருஷ்ணன். 
இன்றைக்கு மதுரை தெருக்களில் வேண்டாத பொருளாக எறியப்பட்டுக் கிடக்கும் நூற்று இருபது பேருக்கு மூன்று வேளையும் வயிறார சாப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார் கிருஷ்ணன். மனநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், உழைத்து சாப்பிடமுடியாத முதியவர்கள் என்று பாவப்பட்ட ஜீவன்கள்தான் அவர்கள் அனைவரும்.
"எந்த நேரமும் நான் இதே சிந்தனையா திரியுறத பாத்துட்டு எங்க சொந்தக்காரங்க, 'இவன முனி அடிச்சுருக்கு'னு கிளப்பி விட்டுட்டாங்க. அதக்கேட்டுட்டு எங்க அம்மாவும் அப்பாவும் சோட்டாணிக்கரைக்கு என்னைய இழுத்தாங்க. 'அதுக்கு முன்னாடி நான் சாப்பாடு போடுற அந்த ஜீவன்களை ஒரு தடவ நீங்க நேருல வந்து பாக்கணும்'னு அம்மாகிட்ட சொன் னேன். எங்கூட வந்து அந்த ஜீவன்கள பாத்துட்டு வீட்டுக்கு வந்ததுமே, 'இத பாருப்பா, நீ அந்த ஜீவன்களுக்கு சோறு போடு. ஒன்னைய புள்ளயா பெத்து பாக்யம் பண்ணினதுக்காக உனக்கு நாங்க சோறு போடுறோம்'னு ரெண்டு பேருமே கண்கலங்கிப்போய் சொன்னாங்க. அதிலிருந்துதான் நான் முழு நேர வேலையா இதை செய்ய ஆரம்பிச்சேன்" என்று சொல்லி தன் பெற்றோரின் மீதான மரியாதையையும் அதிகப்படுத்தினார் கிருஷ்ணன்.

இன்று இந்த நூற்று இருபது பேருக்கும் ஒரு நாளைக் கான உணவை சமைத்து சப்ளை பண்ணி முடிக்க, மூவாயிரம் ரூபாய் செலவு பிடிக்குமாம். இவருடைய தொண்டுள்ளத்தை கண்டு நெகிழ்ந்துபோன சேவை உள்ளம் கொண்ட இருபது பேர், மாதாமாதம் தலா மூவாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு நாளைக்கு உண்டான செலவை ஏற்றுக்கொண்டு வருகிறார் களாம். கிருஷ்ணனின் பெற்றோர் இருவரும் மேற்கொண்டு இரண்டு நாட்களுக்கான செலவை பகிர்ந்துகொள்ள, மீதி எட்டு நாட்களுக்குத்தான் சிரமம். திருமணம், பிறந்தநாள் என்று ஏதாவது நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள், கொடுக்கும் உணவை வைத்து அதைச் சமாளித்து வருகிறார் கிருஷ்ணன்.
சாப்பாடு சப்ளை போக மீதி நேரங்களில் அழுக்காக திரியும் மனநோயாளிகளை மாநகராட்சி குளியலறைக்குள் கூட்டிபோய் குளிக்கவைத்து அவர்களுக்கு மாற்றுத் துணி கொடுத்து பளீச் ஆக்கிவிடுகிறார். முடிவளர்த்துக் கொண்டு திரியும் மனநோயாளிகளை உட்கார வைத்து, கத்தரி பிடித்து அவர்களுக்கு முடி வெட்டிவிட்டு அழகு பார்க்கிறார், வேதங்களை முறைப்படி கற்ற 24 வயது, கிருஷ்ணன்!
***
ரம்ப காலகட்டத்தில் நாளொன்றுக்கு நூற்று இருபது பேரின் பசிப் பணியைப் போக்கி வந்த கிருஷ்ணன், கடந்த எட்டு ஆண்டுகளாக தனது அக்ஷயா அறக்கட்டளை மூலம் தினமும் ஏறத்தாழ 400 பேருக்கு மூன்று வேளை உணவு அளித்து வருகிறார்.
அன்றாடம் காலை 4 மணிக்கே துவங்கிவிடும் இவரது சேவைப் பயணம், சுமார் 200 கி.மீ தூரம் வரை மதுரையை வலம் வந்து, வீடற்ற ஏழை மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்குவது வழக்கம்.
கிருஷ்ணனின் அடுத்த இலக்கு... வீதியில் வசிப்போருக்கு வசிக்க வீடு கட்டித் தருவதே. அதற்கான, செயல் திட்டங்களை வகுத்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
உங்கள் ஓட்டு கிருஷ்ணனுக்கே...
உலகின் சிறந்த 10 மனிதர்களைத் தெரிவு செய்துள்ள சி.என்.என்., அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து 'சி.என்.என். ஹீரோ ஆஃப் தி இயர்' என்ற கெளரவத்தை அளிக்க இணையத்தில் வாக்கெடுப்பு நடத்தி வருகிறது.
சி.என்.என். தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றதால் இப்போது 25,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றால், கிருஷ்ணனுக்கு 1,00,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். அது, அவரது கனவுத் திட்டத்துக்கு உறுதுணை புரியலாம்.
"என்னுடைய மக்களைக் காப்பற்ற வேண்டும். இதுவே, எனது வாழ்க்கையின் நோக்கம்."
- இந்த உன்னத மந்திரச் சொல்லை தனது ஒரே கொள்கையாக கொண்டுள்ள மதுரை நேசம் கிருஷ்ணன், உலகின் முதன்மை நாயகனாக தேர்ந்தேடுப்பதற்கு, உங்கள் ஓட்டுகளை பதிவு செய்ய...http://heroes.cnn.com/vote.aspx
நவம்பர் 18 ஆம் தேதி வரை இந்த வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
கிருஷ்ணன் பற்றிய முழு விவரங்களைத் தரும் சி.என்.என். பக்கம்... THIS IS YEAR HERO NARAYANAN KRISHNAN (PROTECTING THE POWERLESS)
கிருஷ்ணனின் அக்ஷயா அறக்கட்டளையின் வலைத்தளம்... http://www.akshayatrust.org/
இந்திய இணையவாசிகள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தாலே கிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதி!

நன்றி: நியூஸ் விகடன் (23/10/2010)

Sunday, October 17, 2010

காவிக்கு பணிந்த நீதி!


ரோமிலா தாப்பர்


காவிக்கு பணிந்த நீதி!

இயர்லி இந்தியா புத்தகத்தின் பிரபல இந்திய வரலாற்று நிபுணர் ரோமிலா தாப்பர் சமீபத்தில் அலஹாபாத் உயர் நீதிமன்றம் அளித்த பாபர் மஸ்ஜித் தீர்ப்பு, வரலாற்றின் கண்ணியத்திற்கு இழுக்கை ஏற்படுத்திவிட்டது எனக் கூறி தீர்ப்பிற்கு தனது கடும் எதிர்ப்பை ஆதாரத்துடன் விவரித்துள்ளார்.

மேலும் இந்த தீர்ப்பு நீதிமன்ற சட்டத்தில் எங்கும் இல்லாத புதிய வழிமுறையை வகுத்துள்ளது. அதாவது, இனிமேல் யார் வேண்டுமானாலும் இந்த இடம் இந்த கடவுள் அல்லது கடவுள் தன்மையுள்ள ஒருவர் பிறந்த இடம் எனக்கு கூறி ஆதாரம் ஏதும் காட்டாமல் நிலத்தை உரிமை கொண்டாட இந்த தீர்ப்பு வழிவகை செய்துள்ளது எனக் கூறி தீர்ப்பின் கோமாளித்தனத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

முன்னணி ஆங்கில நாளேடான தி ஹிந்து இதை விரிவாக விளக்கியுள்ளது


கட்டுரையாளர்: பிரபல வரலாற்றாய்வாளர் ரொமீலா தாப்பர்

பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு ஒரு அரசியல் தீர்ப்பாகும். ஆட்சியாளர்களால் பல வருடங்களுக்கு முன்பாகவே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய ஒரு தீர்மானம் மட்டுமே அந்த தீர்ப்பில் தெளிவாக காணக்கிடைக்கிறது.

நிலத்தின் உரிமை யாருக்கு? என்பதுதான் வழக்கிய முக்கிய பிரச்சனை. தகர்க்கப்பட்ட மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் ஒரு புதிய கோயிலை கட்டுங்கள் என்பதுதான் அத்தீர்ப்பின் முக்கிய பலன். சர்ச்சைக்குரிய இவ்விவகாரம் சமகால அரசியலிலும், மதரீதியான பிளவுகளிலும் மூழ்கிக் கிடக்கிறது. வரலாற்று ரீதியான ஆவணங்களின் அடிப்படையிலேயே இவ்வழக்கில் தீர்ப்புக்கூற வேண்டும் என உரிமைக் கோரப்பட்டது. ஆனால் இதனை நீதிமன்றம் பரிசீலித்திருந்தும்கூட தீர்ப்பு கூறும் வேளையில் அதனை முற்றிலும் புறக்கணித்து விட்டதாகவே காணமுடிகிறது.

ஒரு நீதிபதி கூறியுள்ளது என்னவெனில், தெய்வீக அம்சம் பொருந்திய நபர் ஒருவர் இந்த சர்ச்சைக்குரிய நிலத்தின் துல்லியமான ஒரு இடத்தில் பிறந்தார் என்பதாகும். அதனால்தான், கோயிலை அவ்விடத்தில்தான் கட்டவேண்டும் என கூறுகிறார்.நாட்டு மக்களின் நம்பிக்கையையும், எண்ணங்களையும்தான் நீதிமன்றம் இவ்விவகாரத்தில் கவனத்தில் கொண்டுள்ளது. ஆனால்,இதனை நிரூபிக்க தேவையான எத்தகையதொரு ஆதாரமும் இல்லை. ஆகையால்தான், இந்த நீதிமன்றத்திலிருந்து எதிர்பார்த்தது இத்தகையதொரு தீர்ப்பை அல்ல.

ஹிந்துக்கள் ராமனை தெய்வமாக கருதி வழிபடுகின்றனர் என்பது உண்மைதான். ஆனால், அதன் பெயரால் மட்டும் ராமனின் பிறந்த இடம் தொடர்பான, நிலத்தின் உரிமைத் தொடர்பான தீர்மானங்களை ஒரு நீதிமன்றத் தீர்ப்பில் ஏற்றுக்கொள்வது சரியா?அதுமட்டுமல்ல, இவ்விடத்தை கைப்பற்றுவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னம் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு தகர்க்கப்பட்டுள்ளது என்பதும் நினைவுக் கூறத்தக்கது.

நீதிமன்றம் கூறுகிறது, 12-ஆம் நூற்றாண்டில் இவ்விடத்தில் ஒரு கோயில் இருந்ததாம். அது தகர்க்கப்பட்ட பிறகே அங்கு மஸ்ஜித் கட்டப்பட்டதாக தீர்ப்பில் கூறப்படுகிறது. அதனாலேயே, அங்கு ஒரு கோயிலை கட்டுவதற்கான நியாயமும் தீர்ப்பில் முன்வைக்கப்படுகிறது.இதுத்தொடர்பாக அகழ்வாராய்ச்சித்துறை (ஆர்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா) நடத்திய ஆய்வுகளும் அவர்களுடைய அனுமானங்களும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், அகழ்வாராய்ச்சித் துறையின் அனுமானங்களை, ஏராளமான பிரபல அகழ்வாராய்ச்சி ஆய்வாளர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் கடுமையான கேள்வி எழுப்பியதும், நிராகரித்ததுமாகும்.இவ்விஷயங்கள் அந்தந்த துறைகளின் வல்லுநர்களின் நிலைப்பாடுகளுடன் தொடர்புடையதாகும். அதில், பெரிய அளவிலான கருத்து வேறுபாடுகள் தற்பொழுதும் உள்ளன. ஆனால், நீதிமன்றமோ ஒரு தலைப்பட்சமான இந்த நிலைப்பாட்டை, பெரிய அளவிலான பரிசீலனைக்கு உட்படுத்தாமல் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே இத்தீர்ப்பில் நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இதனை கருதவியலாது.

இன்னொரு நீதிபதி கூறுகிறார், தான் ஒரு வரலாற்று அறிஞர் இல்லை என்பதால் இவ்வழக்கின் வரலாற்று ரீதியான விவகாரங்களில் தலையிட முடியாது என. ஆனாலும், அவர் கண்டறிந்தது, இந்த வழக்குகளை தீர்மானிப்பதில் வரலாறோ, அகழ்வாராய்ச்சி அறிவியலோ முற்றிலும் தேவையல்ல என்பதாகும். ஆனால்,இங்கு சர்ச்சைக்குரிய விஷயம் என்னவெனில் நிலம் தொடர்பான உரிமைக்கோரல்களில் வரலாற்றுரீதியான சாத்தியம் என்ன என்பதாகும்.

கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இங்கு நிலைப் பெற்றிருந்த வரலாற்றுரீதியான சிதிலங்கள்தான் இங்கு ஆய்வுக்குரிய விஷயம். அங்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மஸ்ஜித் ஒன்று நிலைப்பெற்றிருந்தது. அது, இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் முக்கிய பகுதியாக விளங்கியது. ஒரு அரசியல் கட்சியின் தலைவர்களின் உணர்ச்சியைத் தூண்டும் நடவடிக்கைகளின் காரணமாக ஒரு கும்பல் வேண்டுமென்றே அதனை இடித்துத் தள்ளியது.ஆனால், இவ்வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் இதுவரைக் கிடைத்த பக்கங்களில் எந்த ஒரு இடத்திலும் இந்த மஸ்ஜித் தகர்க்கப்பட்ட சம்பவம் நம்முடைய பாரம்பரியத்திற்கு எதிரானது என்றோ அல்லது கண்டிக்கத்தக்க சம்பவம் என்றோ கூறப்படவில்லை. இனி வரவிருக்கும் ராமர்கோயில் என்பது ராமன் பிறந்ததாக நம்பப்படும் இடத்தில் ஒரு இடிக்கப்பட்ட மஸ்ஜிதின் சிதிலங்களின் மீது கட்டப்பட்டது எனக் கூறப்படும்.

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் எப்பொழுதோ நடந்ததாக கூறப்படும் கோயில் இடிப்பு நீதிமன்றத் தீர்ப்பில் கண்டிக்கப்படுகிறது. அதுவே, புதிய கோயில் கட்டுவதற்கான நியாயமாகவும் தீர்ப்பில் கூறப்படுகிறது. அங்கே நிலைப்பெற்றிருந்த மஸ்ஜிதை தகர்த்த சம்பவம் இந்தளவிற்கு தீர்ப்பில் கண்டிக்கப்படவில்லை. மிகவும் வசதியாக, இவ்வழக்கின் எல்லைக்கு வெளியேதான் மஸ்ஜிதை தகர்த்த சம்பவம் என நீதிமன்றம் தீர்மானித்திருக்கும் என தோன்றுகிறது.

நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை நமக்கு தருகிறது. அதாவது, ஏதேனும் ஒரு புனிதர் பிறந்தார் எனக்கூறி ஏதேனும் ஒரு மதப்பிரிவினர் ஏதேனும் ஒரு நிலத்தின் மீது உரிமைக்கோரலாம் என்பதாகும். இனி இத்தகையதொரு ஏராளமான ஜென்மபூமிகள் நாட்டின் பல பகுதிகளிலும் எழும்பும்.

தமது வசதிக்கேற்ப பொருந்திய ஒரு இடத்தை கண்டறிந்து அதற்கு தேவையான சில உரிமை வாதங்களையும், சர்ச்சைக்குரிய விஷயங்களையும் உருவாக்கினாலே போதும்.இங்கே நடந்த வரலாற்றுச் சின்னத்தின் இடிப்பை நீதிமன்றம் கண்டிக்காத சூழலில் எதிர்காலத்தில் வழிபாட்டுத்தலங்களை இடிக்க பலரும் கிளம்பினால் அதனை எவ்வாறு தடுக்க இயலும்?

வழிப்பாட்டுத்தலங்களின் நிலையை மாற்றுவதை தடைச்செய்யும் 1993 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் பெரிதாக ஒன்றும் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் இதுவரையிலான நமது அனுபவம் எடுத்தியம்புகிறது.வரலாற்றில் நிகழ்ந்ததெல்லாம் நிகழ்ந்ததுதான். அவற்றையொன்றும் இனி மாற்றவியலாது. ஆனால், உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பதை ஆவணங்கள் பரிசோதிக்கவும், அதன் நம்பிக்கைக்குரிய ஆதாரங்களை கண்டறியவும் நம்மால் இயலும்.

இன்றைய சமகால அரசியல் விருப்பங்களுக்காக வரலாற்றை மாற்றவியலாது. வரலாற்றின் மீதான மரியாதையை சீர்குலைத்து, அதற்கு பதிலாக மதநம்பிக்கையை நிலைநிறுத்துகிறது நீதிமன்றத்தின் தீர்ப்பு.ஆனால், சமூகத்தில் நல்லிணக்கமும், அமைதியும் நிலைப்பெற வேண்டுமானால், நமது நாட்டின் நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். அதற்கு முக்கியமாக தேவை என்னவெனில், நீதிமன்றங்கள் தங்களின் தீர்ப்பை வழங்குவதற்கு மதத்தையும், நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொள்ளக்கூடாது. மாறாக, ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கவேண்டும். இந்த உணர்வு மக்களிடையே ஏற்படவேண்டும்.

நன்றி:தி ஹிந்து, தேஜஸ், பாலைவனத் தூது.

Sunday, September 26, 2010

பாபர் கோவிலை இடிப்பவரா?

Babar
இதுவரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மட்டுமே அறிவுடைய மக்களுக்குப் போதுமானதாகும். ஆயினும், ஒரு வாதத்துக்காக அங்கே கோவில் இருந்தாலும் பாபர் அதை இடித்திருக்க மாட்டார்.
ஏனெனில், இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத்தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள்ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.
கோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
மேலும் பாபர் ஆட்சி புரிந்தபோது முஸ்லிம்களின் சதவிகிதம் இப்போதுள்ளதைவிட பன்மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். பெரும்பான்மை மக்களின் வழிபாட்டுத் தலத்தை பாபர் இடித்திருந்தால் அப்போதே மாபெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டு பாபர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார்.
பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள எந்த மனிதனும் இதுபோன்ற காரியங்களைச் செய்யவே மாட்டார்.
பாபர், அவரது மகன் ஹிமாயூன், அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும் வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்றால் இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகவில்லையா?
Humayun
பாபர் தமது கடைசிக் காலத்தில் தனது மகன் ஹிமாயூனுக்கு பாரசீக மொழியில் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் டெலலியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த உயிலில்,
மகனே! இந்துக்கள் பெரும்பான்மை யாகவுள்ள ஒரு நாட்டை நீ ஆளப் போகிறாய். இந்துக்கள் பசுவைத் தெய்வமாக மதிக்கின்றனர். எனவே எக்காரணம் கொண்டும் பசுவின் மாமிசத்தை உண்ணாதே! அதனால் இந்துக்கள் உன்னை வெறுத்து விடுவார்கள்என்று மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இந்துக்கள் வெறுத்து விடக்கூடாது என்பதற்காக பசுவின் மாமிசத்தையே தவிர்த்துக் கொள்ளச் சொன்ன பாபர், கோவிலை இடித்திருக்க முடியும் என்று சிந்தனையுள்ள யாராவது நம்ப முடியுமா?
பாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குருநானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரை கடுமையாக எதிர்த்து வந்தார். குறிப்பாக பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது.
கோவிலை இடித்து பாபர் பள்ளிவாசல் கட்டியிருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அவருக்குத்தான் அது நன்றாகத் தெரியும். கோவிலை இடித்துக் கட்டிய பள்ளிவாசலை அவர் ஒருக்காலும் ரசித்திருக்க மாட்டார்.
பாபர் கொடுங்கோலர் என்பதால் பயந்து கொண்டு விமர்சனம் செய்யாமல் மக்கள் இருந்திருக்கலாம் என்று பொய்யாகக் கற்பனை செய்து சிலர் கூறுகின்றனர்.
 பாபர் கொடுங்கோலராகவோ, இந்துக்களால் வெறுக்கப்பட்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு வாதத்துக்காக பாபர் கொடுங்கோலர் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதம் சரியானது அல்ல.
Akbar
பாபருக்குப் பின் அவரது மகன் ஹீமாயூன் ஆட்சி செய்கிறார். பாபர் இறந்து 25 ஆண்டுகளில் அவரது பேரன் அக்பர் ஆட்சிக்கு வருகிறார். இவர் இஸ்லாத்தை விட்டு விலகி, தீனே இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கினார். சங்பரிவாரத்தினர் பாராட்டும் அளவுக்கு இந்துச் சார்புடைய மன்னராக இருந்தார் அக்பர்.
கோவிலை பாபர் இடித்திருந்தால் அதை நேரில் பார்த்த பலரும் அக்பர் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள். அக்பருக்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை. உங்கள் தாத்தா இடித்த கோவிலைக் கட்டித் தாருங்கள்என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்போதே அக்பர் அதைச் செய்திருப்பார்.
இடித்திருந்தால்தானே கேட்டிருப்பர்கள்? அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே.
அதுதான் போகட்டும்! முஸ்லிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே! அந்தக் காலம் முதல் நாடு விடுதலை அடைந்த 1948 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்சினையோ இருந்ததா என்றால் அறவே இல்லை.
 வெள்ளையர்களின் 200 ஆண்டு கால ஆட்சியிலும்  ”கோவிலை இடித்துவிட்டார்கள்; அதை எங்களிடம் தாருங்கள்என்று வழக்கு ஏதும் பதிவாகவில்லை. ஒர் காலகட்டத்தில் இந்து முஸ்லிம் பகைமை மிகவும் உச்சத்தில் இருந்தது. அந்தக் காலத்தில்கூட இதுபோன்ற பிரச்சினை எதுவுமில்லை.
1949 டிசம்பர் 23ல் சிலைகளைப் பள்ளி வாசலில் வைத்து பிரச்சினையை முதன் முதலாகத் துவங்கும்வரை இராமர் கோவில் என்ற எந்த விவகாரமும் இருக் கவில்லை.
இன்னும் சொல்வதாக இருந்தால் அயோத்தியில் இராமர் பிறந்த இடம் என்ற பெயரில் 30 கோவில்கள் இன்றளவும் உள்ளன. இராமர் பிறந்த இடம் என்று பல இடங்களைக் குறிப்பிட்ட இந்துக்கள் பாபர் மசூதியையும் அதில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை.
1949ல் சங்பரிவாரம் புளுகு முட்டையை அவிழ்த்து விடும்வரை இதுதான் நிலைமை.
எனவே மக்களின் வெறியைக் கிளறி விட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தப் பொய்யைப் பரப்பினார்கள்.
வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெள்ளை மனம் படைத்த இந்து மக்களை ஏமாற்றி வளர்ந்து ஆட்சியையும் பிடித்தார்கள்.
இந்துச் சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போம்.  
سبحان الله وبحمده سبحان الله العظيم  
ஒன்று பட்ட சமுதாயமாக வாழ
நம் அனைவருக்கும்
அந்த வல்ல இறைவன்
அருள் புரியட்டும். ஆமீன்

இராமர் கடவுளாகக் கருதப்பட்டது எப்போது?


 இராமருக்குக் கோவில் கட்டுவது என்றால் அவரை இந்துக்கள் கடவுளாகக் கருதத் தொடங்கிய பிறகுதான் கட்டுவார்கள். இராமரைக் கடவுள் என்று இப்போது இந்துக்கள் நம்பினாலும் ஆரம்பத்தில் இந்துக்கள் அவ்வாறு நம்பவில்லை.
 குறிப்பாக, கோவில் கட்டப்பட்டதாக சங்பரிவாரர் கூறும் 300, 1100 குப்தர் காலத்தில் இராமர் கடவுள்களில் ஒருவராகக் கருதப் படவில்லை.
 கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமர சிம்ஹ என்பவர் அமர கோஷாஎன்ற பெயரில் சமஸ்திருத கலைக் களைஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கடவுளாகக் கருதப்பட்டவர்கள் என்ற பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலில் இராமர் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இந்துக்கள் இராமரைக் கடவுளின் அவதாரமாகக் கருதவில்லை என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.
லட்சுமிதர் என்பவர் புனித யாத்திரைத் தலங்கள் என்ற பெயரில் 11 ஆம் நூற்றாண்டுவரை, அதாவது குப்தர்களின் கடைசிக் காலம்வரை இந்தியாவில் இருந்த புனிதத் தலங்களைப் பட்டியல் போட்டுள்ளார். அந்தப் பட்டியலில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.
 குப்தர் ஆட்சியில் இராமர் கோவில் கட்டப்பட்டது உண்மை என்றால் அந்த ஆலயம் ஏன் புனித யாத்திரைத் தலங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை?
அதுபோல் எஸ்.எஸ். ஐயர் என்ற ஆய்வாளர், ‘இந்தியக் கோவில்கள், கட்டடக்கலை, சரித்திரக் குறிப்புக்கள்என்ற நூலை வெளியிட்டுள்ளார்.
அதில் அயோத்தியின் இராமர் கோவில் பற்றி அவர் கூறவில்லை.
விக்கிரமாதித்தன் கட்டிய கோவில்கள் என்ற தலைப்பில் ஐந்து கோவில்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.
ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராமச்சந்திர கத்ரி என்பவர் 1989 நவம்பர் 12 தேதியிட்ட ரேடியன்ஸ்பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா உள்ளிட்ட பல ஆதாரங்களைக் காட்டி, கி.பி. 1100க்குப் பிறகுதான் இராமரைக் கடவுள் என்று கருதி வழிபடும் நிலை உருவானது எனக் கூறுகிறார்.
அதாவது கடைசி விக்ரமாதித்த மன்னர் காலம் வரை ராமர் என்பவர் இந்துக்களின் கடவுள்களின் அவதாரங்களில் ஒருவராக வணங்கப்படவில்லை.
கடவுளாகக் கருதப்படாதவருக்கு குப்தர்கள் கோவில் கட்டினார்கள் என்று மனசாட்சி உள்ள இந்துக்கள் நம்ப முடியுமா?
இன்னும் தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய இராமாயணம் சமஸ்கிருத மொழியில்தான் இருந்தது. சமஸ்கிருதம் மக்களின் பேச்சு மொழியாக இருக்கவில்லை. பிராமனப் பண்டிதர்கள் மட்டுமே அறிந்த மொழியாகத்தான் இருந்தது. எனவேதான் இராமர், மக்களால் கடவுளாகக் கருதப்படவில்லை.
 மக்கள் பேசுகின்ற இந்தி மொழியில் துளசிதாசர் என்பவர் இராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார். இதன் பின்னர்தான் இராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது. துளசி தாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்ட பின்பு தான் இராமர் கடவுள் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார்.
துளசிதாசர் காலம் என்ன?
எந்தக் காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாகக் கூறுகிறார்களோ, எந்தக் காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, அதே காலத்தில் தான் துளசிதாசரும் வாழ்கிறார். அதுவும் அயோத்தியில் வாழ்கிறார். 1500 களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார். அந்த ஆட்சியின் கீழ்தான் துளசிதாசரும் வாழ்கிறார்.
இராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை. இந்து மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
இராமாயணமே இந்தியில் மக்கள் மத்தியில் பரவாத காலத்தில் இராமர் எப்படி கடவுளாகக் கருதப்பட்டிருப்பார்? எப்படி அவருக்குக் கோவில் கட்டபட்டிருக்கும் என்பதை நியாயவுணர்வுள்ள இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்தியாவில் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். இவரது மகன் சர்வபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளருமாவார்.
இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் கி.பி. 1750க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவி லும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளேஎனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார்.
200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528ல் இல்லாத இராமர்கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கோருகிறோம்.
உண்மை என்னவென்றால் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் இப்ராஹிம் லோடியாவார். இவர் 1524ல் பள்ளி வாசலுக்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் அப்பணியைத் தொடர வில்லை. இப்ராஹிம் லோடியைக் கொன்றுவிட்டு அப்பகுதியைக் கைப்பற்றிய பாபர், 1528ல் அந்த அடித்தளத்தின் மீது பாபர் பள்ளியைக் கட்டினார். எனவே பாபர் கோவிலை இடித்தார் என்று கூறு வது முழுப் பொய் என்பது இதன் மூலமும் தெளிவாகிறது.
(தொடரும்...)

அயோத்தியில் இராமர் கோவில் இருந்ததா?

பாபர் மசூதி 1528ல் கட்டப்பட்டது. மீர்பாகி என்ற பாபரின் தளபதி அங்கிருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் கோவிலைக் கட்டினார்! என்ற வாதத்திலாவது உண்மை உள்ளதா என்றால் அதிலும் உண்மை இல்லை.
இந்த இராமர் கோவிலை விக்கிரமா தித்த மன்னர் கட்டினார் என்று சங்பரிவா ரத்தினர் கூறுகின்றனர். விக்கிரமாதித்தன் என்பது சோழன், பாண்டியன் போன்ற பொதுப் பெயராகும். சந்திர குப்தர், சமுத்திர குப்தர் உள்ளிட்ட குப்த மன்னர்கள் தான் விக்கிரமாதித்தன் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர்.
அவர்களில் இராமர் கோவிலைக் கட்டிய மன்னர் யார் என்பதைப் பற்றி பலவறாக முரண்பட்டுக் கூறுகிறார்கள். கோவிலைக் கட்டிய விக்கிரமாதித்தன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
அவர்களின் கூற்று பொய் என்பதில் ஐயம் இல்லை.
குப்த மன்னர்கள் உ.பி.யில் சில பகுதி களை ஆட்சி செய்த காலம் கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரையாகும். இந்த எண்ணூறு ஆண்டுகளில் ஆட்சி செய்த குப்த மன்னர்களே விக்கிரமாதித்தன் எனப்படு கின்றனர்.
கி.பி. 300 முதல் 1100 வரை அயோத்தி என்று கூறப்படும் நகரில் மனித சஞ்சாரமே இருந்ததில்லை. இந்திய தொல் பொருள் இலாகாவின் தலைவர் பி.பி. லால், 1975ல் சமர்ப்பித்த ஆய்வ றிக்கை தி வீக்’ (25.02.90) எனும் ஆங்கில ஏட்டிலும் சன்டே டைம்ஸ்’ (20.11.87) ஏட்டிலும் வெளியிடப்பட்டது.
 இந்த அறிக்கையில் பலவிதமான ஆதாரங்களை எடுத்துக் காட்டி அயோத்தி எனப்படும் அந்தப் பகுதியில் குப்தர்கள் ஆட்சி செய்த 300 முதல் 1100 வரையிலான கால கட்டத்தில் எந்த மனிதனோ, கட்டடமோ, கோவிலோ, வேறு எதுவுமோ இருந்ததில்லைஎன்று அடித்துக் கூறுகிறார்.
 ‘மனிதர்கள் வாழாத இடத்தில் குப்தர்கள் கோவில் கட்டினார்கள்என்று கூறுவது பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது. இல்லாத கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்பதை இந்து நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
(தொடரும்....)

அயோத்தியில் ராமர் பிறந்தாரா?


அயோத்தியில், அதுவும் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியானது என்பதைக் காண்போம்.
இராமரைப் பற்றி இந்துக்கள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சங்பரிவாரத்தினரின் கூற்றுக்களின் அடிப்படையில் எடுக்கக்கூடாது. இந்து மதப் புராணங்களை மேற்கோள் காட்டியே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் மனம் போக்கில் யாரேனும் இராமரைப் பற்றி முடிவு செய்தால் அது அவரது முடிவாகத்தான் இருக்குமே தவிர இந்து மதத்தின் முடிவாக இருக்க முடியாது.
இராமரைப் பற்றி முதன் முதலில் வால்மீகி என்பவர் சமஸ்கிருத மொழியில் இராமாயணத்தை எழுதினார். இராமரைப் பற்றி அதில் கூறப்பட்ட விஷயங்கள் தான் இராமரைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாகும்.
வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்ததைப் பற்றிக் கூறும்போது, ‘அவர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று கூறப் பட்டுள்ளது.

இந்துக்களின் கால அளவை முறையில் யுகம் என்பது காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு. அவை:

·         கிருத யுகம்                      -               17,28,000 ஆண்டுகள் கொண்டது.
·         திரேதா யுகம்                   -               12,96,000 ஆண்டுகள் கொண்டது.
·         துவாபர யுகம்                -               8,64,000 ஆண் டுகள் கொண்டது.
·         கலியுகம்                           -               4,32,000 ஆண்டுகள் கொண்டது
என்பனவாகும்.
அதாவது கிருத யுகத்தில் பாதி அளவு கொண்டது திரேதா யுகம். திரேதா யுகத்தில் பாதி அளவு கொண்டது துவாபர யுகம். துவாபர யுகத்தில் பாதி அளவு கொண்டது கலியுகம்.
இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலியுகம். கலியுகம் கிறிஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன் துவங்குகிறது. இயேசுவுக்குப் பின் 2008 ஆண்டுகள் ஆகின்றன. இதன்படி கலியுகம் துவங்கி 5110 ஆண்டுகள் நடக்கிறது. இந்த யுகத்தில் இராமர் பிறக்கவில்லை. கலியுகத்துக்கு முந்திய யுகம் துவாபர யுகம். இந்த யுகத்திலும் இராமர் பிறக்க வில்லை. இந்த யுகத்துக்கும் முந்திய யுகம்தான் திரேதா யுகம். இந்த யுகத்தின் கடைசி வருடத்தில் இராமர் பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட 8,64,000 + 5,110 = 8,69,110 எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் இராமர் பிறந்தார் என்பது வால்மீகி இராமாயணத்தின் தீர்ப்பு.
இராமர் பிறந்த காலம் பற்றி வால்மீகி இராமாயணம் கூறுவது போலவே அவர் பிறந்த ஊர் பற்றி கூறும்போது, ‘இராமர் அயோத்தி என்னும் பட்டணத்தில் பிறந்தார்எனக் கூறுகிறது. அப்படியானால் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அயோத்திப் பட்டணம் இருந்தி ருக்க வேண்டும். ஆனால் உ.பி.யில் உள்ள அயோத்தி எப்போது தோன்றியது என்று பல விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், மத்திய அரசாங்கத்தின் தொல் பொருள்துறை சார்பில் அயோத்தியை ஆய்வு செய்து 1976, 77ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் 52, 53 ஆகிய பக்கங்களில் அயோத்தி என்ற ஊர் உண்டானதும், அதில் மக்கள் வசிக்கத் தொடங்கியதும் கி.மு.700 ல் தான் இருக்க முடியும்எனக் குறிப்பிடுகின்றார். அதாவது 2708 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது.
இதன் பின்னர், சி.பி.லால், கே.என். தீட்சித் ஆகிய வரலாற்று வல்லுனர்கள் 1979, 80ல் இதை மறு ஆய்வு செய்தனர். தொல்பொருள் துறையினரின் மேற்கொண்ட முடிவு சரியானதே என்று அவர்கள் கண்டுபிடித்தனர். அயோத்தியில் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்தார் என்று வால்மீகி கூறுகிறார். ஆனால் ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அந்தக் காலத்தில் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்த தில்லை என்பது தெளிவாகிறது. இராமாயணத்தையும் மறுக்காமல், தொல்பொருள் அறிஞர்களின் கண்டுபிடிப் புகளையும் மறுக்காமல் ஒரு முடிவுக்கு வருவதாக இருந்தால் என்ன முடிவுக்கு இந்துக்கள் வர வேண்டும்?
இந்த அயோத்தியின் வயது 2708 ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால் ராமாயணத்தில் கூறப்பட்ட அயோத்தி இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அந்த அயோத்தி இருந்திருக்கலாம். ஒரு பெயரில் பல ஊர்கள் இருப்பது சாதாரண மானதுதான் என்ற முடிவுக்குத்தான் அவர்கள் வரவேண்டும். அப்போதுதான் நடைமுறை உண்மைக்கு முரணில்லாமலும், இராமாயணத்தை மறுக்காமலும் முடிவு எடுத்ததாக அமையும்.
இராமர் பிறந்தது இந்த அயோத்தி அல்ல; வேறு அயோத்திதான்என்பதற்கு இராமாயணத்திலேயே இன்னும் பல சான்றுகள் உள்ளன. அயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது. ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும்.ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை.
அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமா யணம் கூறுவது மெய்யாகும்.
இந்த அயோத்திதான் அந்த அயோத்திஎன்று கூறுவது இராமாயணத்தை மறுத்து இந்து மதத்தையே மறுப்பதாக ஆகிவிடும்.
அதுபோல் சரயூநதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது.
ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை. மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது. இதிலிருந்து தெரிய வருவது என்ன? இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பதுதான்.
மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிறது. ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது.
அதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார்.
நேபாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு நதி ஓடுகிறது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார். எனவே இராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் இராமாயணத்தை மறுத்தவர்களாகின்றனர்.

இராமாயணத்தில் கூறப்படும் அடையாளங்களும், தன்மைகளும் எந்த அயோத்திக்குப் பொருந்துகிறதோ அந்த அயோத்திதான் இராமர் பிறந்த அயோத்தி என்று முடிவு செய்வதுதான் இந்துமதத்தின் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்ட தாகும்.
(தொடரும்....)