மேலத்தெரு - கொடிநகர் முக்கிய நிகழ்வுகள்

மேலத்தெரு - கொடிநகர்.

Thursday, July 17, 2014

யாரைத்தான் நம்புவதோ!

யாரைத்தான் நம்புவதோ! 


நல்ல மனநிலையிலுள்ள 221 பேரை உடனே காப்பகத்திலிருந்து வெளியேற்றி, அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்கவேண்டும். காப்பகம் பற்றிய புகார்களை போலீஸ் தொடர்ந்து விசாரிக்க வேண்டும்'' என்ற அதிரடி உத்தரவைப் போட்டு, பணபலம் மிக்க அக்ஷயா ட்ரஸ்ட் நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது நீதிமன்றம்.

மனநலம் பாதித்தவர் - பாதிக்காதவர்களைக் கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தது, ஆண்களையும் பெண்களையும் ஒரே இடத்தில் தங்க வைத்தது, மர்மமான நிலையில் ஒரே வருடத்தில் 118 பேர் மரணமடைந்தது என்று மதுரைக்கு அருகே கொடிமங்கலத்தில் செயல்பட்டுவரும் அக்ஷயா ட்ரஸ்ட் ஆதரவற்றோர் காப்பகத்தின் மீது ஏராளமான புகார்கள் கிளம்பியுள்ளன. அந்தக் காப்பகம் தொடர்ந்து செயல்படலாமா, கூடாதா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும் வகையில் சம்பவங்கள் நடந்துள்ளன.
பல்வேறு ஊடகங்கள், வெளிநாட்டு சேனல்கள், பத்திரிகைகள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடிய நாராயணன் கிருஷ்ணன் என்பவர் நடத்தும் இந்தக் காப்பகத்தின் மீதுதான் இத்தனைப் புகார்கள்.  ஆங்கீகாரம் பெற்ற பல்வேறு குழுக்கள் காப்பகத்தின் உள்ளேசென்று ஆய்வுசெய்த பின்தான், அங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்களை மிகமோசமாக  நடத்தியது தெரிய வந்துள்ளது.
கடந்த மாதம் 6-ம் தேதி, கொடிமங்கலம் கிராமத்திலிருக்கும் அக்ஷயா காப்பகத்திலிருந்து, நிர்வாணமாக வெளியில் ஓடி வந்தார் இளம்பெண் ஒருவர். அந்தக் கோலத்தைப் பார்த்து கொடிமங்கலம் மக்கள் பதறிப்போனார்கள். அவருக்கு ஆடை அணிவித்து, சாப்பாடு கொடுத்து, என்ன ஏது என்று விசாரித்தபோதுதான் காப்பகத்தில் நடக்கும் கொடுமைகளை அந்தப் பெண் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். அங்கு அவ்வப்போது கேட்கும் அலறல் சத்தத்தையும், மர்மமாகக் கொண்டு செல்லும் பிணங்களையும் பார்த்து அந்த ஊர் மக்கள் ஏற்கெனவே மாவட்ட நிர்வாகத்துக்குப் புகார் கொடுத்திருக்கிறார்கள். இப்போது இந்த சம்பவத்துக்குப் பிறகு களத்தில் குதித்த மக்கள், 'இந்தக் காப்பகத்தில் நடக்கும் அனைத்தும் மர்மமாக உள்ளன. இதில் உள்ள பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று எல்லோரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பிறகே வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆனால், புகாரில் அந்தப் பெண் தனக்கு செக்ஸ் தொந்தரவு தந்ததாகக் குறிப்பிட்டிருந்தவர்கள் மீது போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம், இந்த காப்பகத்தின் நிர்வாகிக்கு மாவட்ட நிர்வாகத்தில் இருக்கும் செல்வாக்கு. இந்த விவகாரத்தைக் கையிலெடுத்த ஜனநாயக மாதர் சங்கம், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தது.
மதுரை மாவட்ட மாதர் சங்கத் தலைவி முத்துராணி, ''அந்தக் காப்பகத்தின் மேல் புகார் வந்ததுமே எங்கள் சங்கம் சார்பாக ஒரு குழு அமைத்து அங்கு சென்று விசாரித்தோம். உள்ளே நிலைமை ரொம்ப மோசமாக இருந்தது. அதில் மனநலம் பாதித்தவர்கள், பாதிக்காதவர்கள் என எல்லோரையும் கலந்து வைத்திருந்தனர். இதைவிடக் கொடுமை பெண்களையும் ஆண்களையும் ஒரே ஹாலில் வைத்திருந்தனர். இவர்களுக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது, என்ன மாதிரி கவுன்சிலிங் வழங்கப்படுகிறது என்பது பற்றி எந்த விவரமும் இல்லை. அங்கு ஒரு செங்கோட்டைக்காரர் இருக்கிறார். அவர் அங்குள்ள 500 பேருக்கும் டீ போட்டுக் கொடுக்கிறார். ஆனால், அவரையும் மனநலம் பாதித்தவர் கணக்கில்தான் வைத்திருக்கிறார்கள்.
நாகாலாந்துகாரர் ஒருவர் தன்னுடைய ஊர் முகவரி, பின்கோடு வரைக்கும் சொல்கிறார். இப்படி தெளிவான நபர்களை அவர்களின் ஊருக்கு அனுப்பாமல் அடைத்து வைத்திருப்பது ஏன்? எதற்கு? கேட்டால், வாரத்துக்கு ஒரு தடவை டாக்டர் வந்து மருந்து கொடுப்பதாக சொல்கிறார்கள். இவ்வளவு பெரிய காப்பகம் நடத்துபவர்கள், நிரந்தரமாக ஒரு டாக்டரை வைத்திருக்க வேண்டாமா?
இதைவிட அதிர்ச்சி என்னவென்றால், ஒரு வருடத்தில் 120 பேர் மரணமடைந்திருப்பதுதான். இறந்து போகிறவர்களைப் பற்றி அவர்களின் குடும்பத்தினருக்கு எந்தத் தகவலும் தெரிவிப்பது இல்லை. இறந்தவர்களைப் பற்றிய ரெக்கார்டுகளும் இல்லை. இனிமேல் இதுபோன்ற கொடுமைகள் நடக்கக் கூடாது என்பதால்தான் வழக்கு தொடர்ந்தோம். முதலில் வக்கீல் கமிஷனர் மூலமும் அடுத்து கோர்ட் பதிவாளர் மூலமும் அடுத்து ஏடி.எஸ்.பி மூலமும் விசாரிக்கச் சொல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தனியார் காப்பகங்களை அரசு அதிகாரிகள் மாதம்தோறும் கண்காணிக்க வேண்டும்'' என்றார்.
காப்பகத்தை ஆய்வுசெய்த வக்கீல் கமிஷனர் கீதா, கோர்ட்டில் சமர்ப்பித்த தன்னுடைய  அறிக்கையில், ''காப்பகத்தில் உள்ளவர்களில் 388 பேர் வெளியேற விரும்புகின்றனர். சிலர் பேசும் வார்த்தைகள் எங்களுக்குப் புரியவில்லை. அங்கிருந்து 63 பேர் தப்பியுள்ளனர். எந்தக் குறைபாடும் இல்லாதவர்கள் 135 பேர். ரோட்டில் திரிவோர், ரயில் நிலையத்தில் படுத்திருப்பவர்களைக் காப்பகத்துக்கு அழைத்து வருகின்றனர். மனநிலை மறுவாழ்வு மையம் நடத்த சில விதிமுறைகள் உள்ளன. அதை எல்லாம் இவர்கள் பின்பற்றவில்லை. ஒரு இடத்தில் 500-க்கும் அதிகமானோர் இருக்கக் கூடாது. மனநோய்க்கு சிகிச்சை அளித்த பின்தான் காப்பகத்தில் சேர்க்க வேண்டும். மனநோய் நிபுணர் முழு நேரம் பணியாற்ற வேண்டும். பெண்களையும் ஆண்களையும் ஒரே கட்டடத்தில் அடைத்து வைக்கக் கூடாது.  வீட்டுக்கு செல்ல விரும்புகிறவர்களை அனுப்பி வைக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
கோர்ட் பதிவாளர் தனது அறிக்கையில், ''காப்பகத்தில் 531 பேர் உள்ளனர். இதில் மனநலம் பாதித்தோர் 91 பேர். வெளியில் செல்ல 247 பேர் விரும்புகின்றனர். இவர்களை உரியவரிடம் ஒப்படைக்க 90 ஆயிரம் ரூபாய் செலவாகும்'' என்று சொல்லியிருக்கிறார்.
இறுதியாக நீதிபதிகள், ''யாரையும் விருப்பத்துக்கு மாறாக காப்பகத்தில் வைத்திருக்கக் கூடாது. வெளியில் செல்ல விரும்பும் 221 பேரையும் விடுவிக்க வேண்டும். முதன்மை டாக்டர், காப்பகத்தை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டுள்ளார்கள். இந்த விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே காப்பகத்தில் இரண்டுபேர் இறந்து போயுள்ளனர். இதுமட்டுமல்லாது, ஏற்கெனவே ஒரு வருடத்தில் 120 பேர் இறந்து போனது சம்பந்தமாக ஏடி.எஸ்.பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஊர்க்காரர்களிடம் விசாரித்தால், ''வெளிநாட்டுப் பணம் கோடி கோடியாக வந்து நாராயணன் கிருஷ்ணனுக்கு கொட்டுகிறது. இவருடைய காப்பகத்திலுள்ளவர்கள் இறந்து போனால் அவர்களுடைய உடல் உறுப்புகள் வெளிநாட்டுக்காரர்களுக்காக எடுக்கப்படுவதாக பேச்சு உள்ளது. இவருக்கு அமெரிக்காவிலும் நெதர்லாந்திலும் ஆபிஸ் உள்ளது. இதற்காகவே வாகனங்களை வைத்துக்கொண்டு தமிழகம் முழுதும் சுற்றி சாலையோரத்தில் கிடக்கும் ஆதரவற்றோர்களை அள்ளி வருகின்றனர். உள்ளூர்க்காரர்கள் யாரையும் தப்பித் தவறிக்கூட காப்பகம் பக்கம் விடுவது இல்லை'' என்கிறார்கள்.
காப்பகத்தின் இயக்குநர் கிருஷ்ணனிடம் கருத்தை அறிய முயன்றோம். அவர் பேசவில்லை. அவரது மனைவியும் இயக்குநருமான சீதாலட்சுமி என்கிற வித்யா, ''எங்களைப் பற்றி என்னென்னவோ எழுதுகிறார்கள். எங்களுக்குத் தர்மத்தின் மீது நம்பிக்கை உண்டு. கிட்னி திருடுகிறார்கள்... உடலுறுப்பை எடுக்கிறார்கள் என்று சினிமாவில் சொல்லுவதுபோல் சொல்கிறார்கள். அப்படி எடுக்க வேண்டும் என்றால் மிகப் பெரிய ஹாஸ்பிடலுக்கான வசதி இங்கு வேண்டும். யாரையும் கட்டாயப்படுத்தி இங்கு தூக்கி வரவில்லை. ஆதரவற்றவர்களுக்கும் மன நோயாளிகளுக்கும் எங்களால் முடிந்த சேவையை செய்து கொண்டிருக்கிறோம். நிர்வாணமாக ஒரு பெண் வெளியே ஓடி வந்ததாக சொல்வதெல்லாம் சுத்தப் பொய். அப்படியெல்லாம் நாங்கள் யாரையும் வைத்திருக்கவில்லை. நாங்கள் கோர்ட்டின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறோம்'' என்றார்.
நல்ல நிலையிலுள்ள 221 பேரை காப்பகத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கடந்த 5-ம் தேதி உத்தரவிட்டிருந்தனர் நீதிபதிகள். இந்த உத்தரவுக்கு ஆட்சேபம் தெரிவித்து அக்ஷயா தரப்பு வழக்கறிஞர், சில விளக்கங்களை அளித்திருந்தார். ''காப்பகம் முறையான அனுமதி பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவர்களில் பலர் போலீஸாரால் காப்பகத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்கள். கோர்ட் நியமித்த விசாரணை குழுக்கள் முறையாக விசாரணை செய்யவில்லை. நீதிபதியே நேரில் வந்து இந்த வழக்கில் முடிவெடுக்க வேண்டும்'' என்றார்.
இந்த வழக்கில் கடந்த 10-ம் தேதி இறுதி உத்தரவை நீதிபதிகள் வாசித்தனர். ''நல்ல மனநிலையிலுள்ள 221 பேரை உடனே விடுவிக்கும்படி முந்தைய அமர்வு உத்தரவிட்டது. நாங்களும் அதே உத்தரவை விடுக்கிறோம். காப்பகம் மீதான மற்ற குற்றச்சாட்டுகளை போலீஸ் தொடர்ந்து விசாரிக்கலாம்.''
போலீஸ் விசாரணைக்குப்பின் நடக்கும் வழக்கில்தான் அக்ஷயா டிரஸ்டின் முழு பரிமாணமும் வெளிவரும்.

நன்றி: ஜூனியர் விகடன்.