மேலத்தெரு - கொடிநகர் முக்கிய நிகழ்வுகள்

மேலத்தெரு - கொடிநகர்.

Monday, May 14, 2012

தனி மரம் தோப்பு அல்ல, வனமாகும்......

அஸ்ஸாம் மாநிலம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஜோர்ஹத். அங்கு செல்ல வேண்டுமெனில் 350 கி.மீ. வாகனத்திலும் பின்னர் 30 கி.மீ. வரை சாலையே இல்லாத சாலையிலும், பின்னர் சுமார் 10 கி.மீ. அதிர்ஷ்டம் இருந்தால் படகு பயணம். பின்னர் 7 கி.மீ. மலையேற்றம். இவ்வளவும் தாண்டி சென்றால் கிராம மக்களால் முலாய் என்று அன்புடன் அழைக்கப்படும் ஜாதவ் பாயங் அவர்களை சந்திக்கலாம்.

ஜாதவ் பாயங். இவரது பெயரை நாம் எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா? நமது பிள்ளைகளிடம் ஐ.பி.எல் உள்ள அனைத்து அணியில் உள்ளவர்களின் பெயர்களை கேட்டவுடன் அவர்களின் விலை பட்டியல் முதற்கொண்டு சொல்லிவிடுவார்கள். இவரை நாம் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இவர் நமது நாட்டின் இயற்கை பாதுகாத்திருக்கிறார் இல்லை இல்லை உருவாக்கி பாதுகாத்திருக்கிறார். அப்படி என்ன செய்துவிட்டார் இவர் என்று கேட்டால், மரம் நட்டிருக்கிறார். அதான் நம் அரசியல்வியாதிகளே செய்கிறார்கள் என்று அலட்சியமாக இவரை ஒதுக்கிவிட முடியாது. ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 550 ஹெக்டேர் (1650 ஏக்கர்) பரப்பளவில் மரம் நட்டு பாதுகாத்து வனத்தையே உருவாக்கி பாதுகாத்து வருகிறார் சுமார் 30 வருடங்களாக.

ஜாதவ் பாயங், அஸ்ஸாமில் பிறந்தவர். 1979-ல் பிரம்மபுத்திரா நதியில் பெருவெள்ளம் ஏற்பட்டது. அவ்வெள்ளத்தில் ஏகப்பட்ட பாம்புகள் அடித்து வந்து கரை ஒதுங்கியது. வெள்ளம் வடிந்ததும் போக்கிடம் அறியா பெரும்பாலான பாம்புகள் மற்றும் ஊர்வன இனங்கள், அந்த இடத்தில் மரங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் வெப்பம் தாளாமல் அம்மண்ணிலேயே மடிந்து போயின. அந்த சிறு உயிர்களின் நிலையை கண்டு கண்ணீர் சிந்தினார். இது மனித குலம் செய்த படுகொலை என்றே கருதினார். இந்த சம்பவம் இவரது மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போது அவருக்கு வயதென்னவோ 16 தான். தன் படிப்பை உதறினார், தனி மரமானார், வனத்திற்கு உரமானார். உடனே அவர் செய்த காரியம்தான் 550 ஹெக்டேர் வனத்திற்கும் வித்து. காட்டிலாகாவினரை சந்தித்தார். அந்த இடத்தில் எந்த வகை மரம் நட்டால் வளரும் என்று கேட்டறிந்தார். அவர்களிடமிருந்து வந்த பதில் மூங்கில். மூங்கில் மட்டுமே அந்த மண்ணிற்கு வளரும், வேண்டுமெனில் அதையே வளர்த்து பார் என்று அரசு இயந்திரம் வழக்கம்போல் அலட்சியமாக கூறியது. இதை பற்றி அவர் கூறும்போது "மிக கடுமையான பணி. யாரும் உதவிசெய்ய முன்வரவில்லை, இருந்தபோதும் செய்தேன்". மரம் நடுவிழாவின் போது மட்டுமே மரம் நட்டு தண்ணீர் ஊற்றி அதற்குபிறகு அதை அம்போன்னு விடுபவர்கள் மத்தியில் அந்த மணல் திட்டிலேயே தன் இருப்பிடத்தை உருவாக்கிக்கொண்டார். காலையும் மாலையும் தவறாமல் தண்ணீர் ஊற்றினார். தன் கண்ணெதிரில் நிலம் சீரமைந்தது, சில வருடங்களிலேயே சாதாரண மணல்மேடு, மூங்கில் கன்று கணு கணுவாய் விட்டு புதராக, வனமாக வளர கண்டார்.

தற்போது அடுத்த அத்தியாயமாக மூங்கில் காட்டை பக்கா வனமாக மாற்ற முடிவெடுத்தார். அதற்கு முன் அந்த மண்ணை வளமாக்க வேண்டும். நல்லவேளை விவசாயத்துறை அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை பெறவில்லை. அவர்களை கேட்டிருந்தால் அந்த உரத்தை போடு, இந்த உரத்தை போடு என்று மண்ணை விஷமாக்கி இருப்பார்கள். மண்ணை வளப்படுத்த அவர் கையாண்ட யுக்தி "சிகப்பு எறும்பு". "மண்ணின் குணத்தை மாற்றும் சக்தி சிகப்பு எறும்பிற்கு உண்டு" தெரிவிக்கும் அவர், தன்னை பலமுறை கடித்தபோதிலும் என் வேலையில் கருத்தாக இருந்த காரணத்தால் மண்ணின் குணம் மாற ஆரம்பித்தது. மற்ற மரக்கன்றுகளை நட ஆரம்பித்து வளர்க்க ஆரம்பித்தார். முன்னிலும் அதிக உழைப்பு, அர்பணிப்பு காரணமாக மரக்கன்றுகள் கிளைகள் பரப்பி விருட்சமாக மாற துவங்கியது. வன விலங்குகள் தங்க ஆரம்பித்தது. விளிம்பு நிலையில் உள்ள விலங்குகளான புலிகள் 5, ஒற்றை கொம்பு காண்டாமிருகம் உட்பட வன விலங்குகளும் கழுகு முதலிய பறவைகள் தங்கள் இடம்பெயர்வு பாதையில் இந்த வனத்திற்கு வரவும் இந்த வனம் சரணாலயமாக மாற ஆரம்பித்தது.

அவர் தேர்ந்த வன பாதுக்காவலர் போன்று "இயற்கை அதன் உணவு சங்கிலியை அருமையாக அமைத்துள்ளது. நம்மால் ஏன் அதனுடன் ஒத்து போக முடியவில்லை. நாகரிகத்தில் உயர்ந்த உயிரி என்று சொல்லிக்கொள்ளும் நாமே அதை வேட்டையாடினால் வேறு யார் அதை பாதுகாப்பார்கள்" என்று வினவுகிறார். இந்த மிகப்பெரிய சாதனை உலகின் எவரும் செய்யாதது. வெளி உலகத்திற்கு தெரியாமலேயே தன் சொந்த முயற்சியின் பலனாக இத்தனை அடர்ந்த காட்டை நம் நாட்டிற்கு அளித்துள்ளார்.

இந்த வனத்தை பற்றி அஸ்ஸாம் மாநில அரசுக்கு தெரிய வந்தது 2008ம் ஆண்டில்தான். அருகில் உள்ள கிராமத்திற்கு இந்த வானத்திலிருந்து யானை கூட்டம் ஒன்று சென்றுவிட்டது. வனத்துறையினர் அதனை விரட்டி இந்த பகுதிக்கு வரும்போதுதான் தற்செயலாக கண்டுள்ளனர். தங்கள் பதிவேட்டிலேயே இல்லாத வனத்தை கண்டு அதிசயித்துள்ளனர். பின்னர் இது குறித்து அரசு கவனத்திற்கு கொண்டு சென்ற பின்பு வனத்துறை விழித்துக்கொண்டு இப்போதுதான் சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் மூலமாக 200 ஹெக்டேர் நிலத்தில் காடு வளர்ப்பை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போதைய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணா ஹண்டிக் "இந்த வனத்தை (முலாய் காடு) தேசிய வன உயிர் பாதுக்காப்பு சட்டம் 1972 கீழ் கொண்டு வந்து பாதுக்காக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். அரசு அப்படி செய்யும் பட்சத்தில் மகிழ்ச்சி அடையும் முதல் நபர் பாயங்காக இருப்பார். செய்யுமா அரசு?

No comments:

Post a Comment